தமிழ் சினிமா

வாக்காளர் பட்டியலில் பெயரில்லை: திணறும் ரோபோ ஷங்கர்

சி.காவேரி மாணிக்கம்

வாக்காளர் பட்டியலில் பெயரில்லாத காரணத்தால், நடிகர் ரோபோ ஷங்கர் திணறி வருகிறார்.

மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு தமிழகம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 19 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று (ஏப்ரல் 18) தொடங்கி நடைபெற்று வருகிறது.

அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், வர்த்தக தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாக்களித்து வருகிறார்கள். இதில் நடிகர் ரோபோ ஷங்கருக்கு சாலிகிராமத்தில் வாக்கு  இருந்தது. ஆனால், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் வாக்களிக்க முடியவில்லை.

வாக்களிக்க முடியாதது குறித்து ரோபோ ஷங்கரிடம் கேட்ட போது, "நான் சாலிகிராமத்தில் உள்ள தியாகி லோகையா தெருவில் வேலாயுதம் காலனியில் வசிக்கிறேன். கடந்த இரண்டு தேர்தல்களிலும் சாலிகிராமம் காவேரி பள்ளியில்தான் என்னுடைய வாக்கைச் செலுத்தினேன். இன்றும் காலை ஆறரை மணிக்கே வந்துவிட்டேன்.

ஆனால், வாக்காளர் பட்டியலில் என்னுடைய பெயர் இல்லை. ‘அங்க பாருங்க... இங்க பாருங்க...’ என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஓட்டு போடுவது நம் கடமை, உரிமை. கடந்த 4 மணி நேரமாக நானும் என் பெயரைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக ஓட்டு போட்டபிறகுதான் இங்கிருந்து செல்வேன்" என்று தெரிவித்தார் ரோபோ ஷங்கர்

SCROLL FOR NEXT