பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மீம் ஒன்றுக்கு, ‘என்னா வயித்தெரிச்சல்டா சாமி’ எனப் பதில் அளித்துள்ளார் இயக்குநர் சேரன்.
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங், தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
தமிழ் தெரியாத ஹர்பஜன், கடந்த வருடத்தில் இருந்து தமிழில் சில ட்வீட்களைப் பதிவிட்டு அசத்தி வருகிறார். இதனால், அவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்புகூட ‘கனா’ படத்தில் சிவகார்த்திகேயன் பேசும் டயலாக்கை வைத்தும், ‘மறுமலர்ச்சி’ படத்தில் இடம்பெற்ற ‘நன்றி சொல்ல உனக்கு’ பாடலை வைத்தும் இரண்டு ட்வீட்களைப் பதிவுசெய்தார் ஹர்பஜன் சிங்.
இவர் இப்படி தமிழில் ட்வீட் செய்வதை வைத்து பல மீம்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதில், ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் சேரனும் கோபிகாவும் ஆடும் ‘மனசுக்குள்ளே காதல் வந்துச்சா’ பாடலின் டெம்ப்ளேட்டை வைத்து, ‘தமிழ் படிக்க ஆசை வந்துச்சா’ என்ற மீமை உருவாக்கியுள்ளனர்.
அந்த டெம்ப்ளேட்டில், கோபிகா உடலில் ஹர்பஜன் சிங் மீமையும், சேரன் முகத்தில் இம்ரான் தாஹிர் முகத்தையும் ஒட்ட வைத்துள்ளனர். இந்த மீம், சமூக வலைதளங்களில் அதிகமானோரால் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ‘சேரன் சார் இதைப் பார்க்கணும்’ என இந்த மீமை ஒருவர் ட்விட்டரில் பதிந்துள்ளார். அதை ரீட்வீட் செய்துள்ள சேரன், “பார்த்தாச்சு... பார்த்தாச்சு... என்னா வயித்தெரிச்சல்டா சாமி” எனக் குறிப்பிட்டுள்ளார்.