நடிகர் விஜய் இன்று காலை 7.30 மணியளவில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்துச் சென்றார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல்கட்டமாக 91 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 11-ம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் 95 தொகுதிகளில் இன்று (ஏப்.18) நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
இத்துடன், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடக்கிறது.
தமிழகம், புதுச்சேரியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய் காலை 7.30 அளவில் சென்னை அடையாறு காமராஜர் அவென்யூவில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு வந்தார்.
மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்துச் சென்றார். அப்போது ரசிகர்கள் அவரை பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டினார். இதனால் வாக்குச்சாவடியில் சிறியளவில் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு விரல் புரட்சி எனப் பாடியவர்..
நடிகர் விஜய் நடித்த சர்கார் படம் அண்மையில் அரசியல் கட்சிகளிடையே மிகுந்த சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் ஒரு விரல் புரட்சியே என்ற பாடல் அந்தப் படத்தில் இடம்பெற்று மக்களிடம் வரவேற்ப்பைப் பெற்றது.