தொடர்ச்சியாக படப்பிடிப்பு தளத்தில் புகைப்படங்கள் வெளியானதால், கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது 'தர்பார்' படக்குழு.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி, நயன்தாரா, யோகிபாபு ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
ஃபோட்டோ ஷூட்டில் தொடங்கி, மும்பை படப்பிடிப்பு வரை தொடர்ச்சியாக 'தர்பார்' படத்தின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் கசிந்து வருகிறது. இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் இருந்தார்கள். மேலும், எப்படி வெளியாகிறது என்ற விசாரணையிலும் இறங்கினார்கள்.
இந்நிலையில், தற்போது கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது படக்குழு. படப்பிடிப்பு நடைபெறும் இடத்துக்கு யாரும் கேமராவோ, மொபைலோ எடுத்து வர இனி அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், படப்பிடிப்பு தளத்தில் புகைப்படங்கள் எடுக்கும் புகைப்படக் கலைஞரும் அன்றைய தினம் எடுத்த மொத்த புகைப்படங்களையும் மாலையில், படக்குழுவினரிடம் கொடுத்துவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இந்த கடும் கட்டுப்பாடால், இனி புகைப்படங்கள் வெளியாகமால் தடுக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. தொடர்ச்சியாக மும்பையிலே சுமார் 80% காட்சிகளை படமாக்கவும் 'தர்பார்' படக்குழு முடிவு செய்துள்ளது.
இப்படத்தை பெரும் பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ், ப்ரதீக் பார்பர், ஹரிஷ் உத்தமன், மனோபாலா, ஆனந்த்ராஜ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வரவுள்ளது.