தனுஷ் நாயகியாக சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் நடிக்கவுள்ளதாக வெளியான செய்திக்கு குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான 'மாரி 2' படத்தில் தனுஷுக்கு நாயகியாக நடித்தவர் சாய் பல்லவி. அப்படத்தைத் தொடர்ந்து தமிழில் சூர்யாவுடன் 'என்.ஜி.கே' படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணனும் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவியது. இதற்கு சாய் பல்லவியின் குடும்பத்தினர் "இதில் உண்மையில்லை. தற்போதைக்கு அவர் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்" என்று தெரிவித்துள்ளனர்.
இந்த வதந்திக்கு தனுஷுடன் பூஜா கண்ணன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. அப்புகைப்படம் தனுஷை சந்தித்த போது எடுத்துக் கொண்டது என்றும் குடும்பத்தினர் விளக்கமளித்துள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு 'அடி பெண்ணே' என்ற மியூசிக் வீடியோ ஒன்றில் நடித்துள்ளார் பூஜா கண்ணன். அப்போதிலிருந்தே நாயகியாக போகிறார் என்ற வதந்தி சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது.