இந்திய சினிமா வரலாற்றில் 'ஐ' திரைப்படத்திற்கு சிறப்பான இடம் இருக்கும் என்று அப்படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
விக்ரம், ஏமிஜாக்சன், உபன் பட்டேல் நடித்திருக்கும் 'ஐ' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார் பி.சி.ஸ்ரீராம். ஷங்கர் இயக்கி இருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.
'ஐ' படத்தின் படப்பிடிப்பு புதன்கிழமையோடு சென்னையில் முடிவுற்றது. 'ஐ' பணிகள் முடித்து விட்டு, பால்கி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'ஷமிதாப்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய மும்பை சென்று விட்டார் பி.சி.ஸ்ரீராம்.
'ஐ' படம் குறித்து பி.சி.ஸ்ரீராம், 'ஷமிதாப்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறேன். 'ஐ' படத்தின் இறுதி 5 நாட்கள் படப்பிடிப்பு என்பது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. இயக்குநர் ஷங்கர், விக்ரம், போஸ்கோ, முத்துராஜ், ஏமி ஜாக்சன், என்னுடைய உறுதுணையாளர் விவேக் மற்றும் 'ஐ' படக்குழு ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'ஐ' கண்டிப்பாக இந்திய சினிமா வரலாற்றில் நீடித்து இருக்கும். இந்த சிறப்பிற்கு எல்லாம் காரணம் இயக்குநர் ஷங்கர் மட்டுமே" என்று கூறியுள்ளார்.
'ஷமிதாப்' படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன், பி.சி.ஸ்ரீராம் மணிரத்னம் இயக்கும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.