தமிழ் சினிமா

மணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’?

செய்திப்பிரிவு

மணிரத்னம் தயாரித்துவரும் படத்துக்கு ‘வானம் கொட்டட்டும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மணிரத்னத்திடம் அசோஸியேட்டாகப் பணியாற்றியவர் தனசேகரன். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் ஜீ.வி.பிரகாஷ், விக்ரம் பிரபு இருவரும் பிரதான பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் திரைக்கதையை, தனசேகரனுடன் இணைந்து மணிரத்னம் எழுதியுள்ளார்.

மேலும், மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார் மணிரத்னம். ‘96’ படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா, இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில், ஜீ.வி.பிரகாஷின் சகோதரியாகவும், விக்ரம் பிரபு ஜோடியாகவும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு ‘வானம் கொட்டட்டும்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘செக்கச்சிவந்த வானம்’. அடுத்தடுத்து தலைப்பில் வானத்தைப் பயன்படுத்தியுள்ளார் மணிரத்னம்.

இந்தப் படத்தைத் தயாரிக்கும் அதேவேளையில், தன் கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதற்கான முன்தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் மணிரத்னம்.

SCROLL FOR NEXT