‘விஸ்வரூபம் 2’, ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’ என்று அடுத்தடுத்து கமலின் மூன்று படங்களுக்கு இசையமைப்பதால் உற்சாகமாக இருக்கிறார் ஜிப்ரான். இசையமைப்பு வேலைகளில் பிஸியாக இருந்த அவரைச் சந்தித்தோம்.
அடுத்தடுத்து கமலின் மூன்று படங்களுக்கு இசையமைக்கிறீர்களே?
இந்த வாய்ப்பு கிடைத்ததற்காக கடவுளுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். நான் கமலுடன் இணைந்து பணியாற்றிய நாட்களை மறக்கவே முடியாது. நிறைய புதுப்புது விஷயங்களை கற்றுக்கொண்டேன். ‘உத்தம வில்லன்’ படத்துக்காக இசையமைக்கும்போது பாலி நாட்டில் இருந்து புதுப்புது இசைக்கருவிகளை எனக்கு அவர் வாங்கிக்கொடுத்தார். அதனால் புதுவிதமான இசையை என்னால் தர முடிந்தது. அதன் பாடல்களைக் கேட்கும்போது நீங்களும் இதை உணர்வீர்கள். படத்தின் இசையமைப்பாளர்களுக்கு கமல் நிறைய இடம் கொடுப்பார். நாம் ஒரு விஷயத்தைச் சொன்னால், அது சரியாக இருக்கும் பட்சத்தில் ஏற்றுக் கொள்கிறார். கமல் சாருடன் பணியாற்றியதை நான் பெருமையாக நினைக்கிறேன்.
‘விஸ்வரூபம் 2’ எப்படி வந்துகொண்டிருக்கிறது?
‘விஸ்வரூபம் 2’ படத்தை நீங்கள் கண்டிப்பாக ஹாலிவுட் படத்தோடு ஒப்பிடலாம். அந்த அளவுக்கு சிறப்பாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. அந்த படத்தைப் பற்றி இப்போது நான் நிறைய பேச முடியாது. ஹாலிவுட் படங்களில் நீங்கள் பார்த்த மெய்சிலிர்க்கும் சண்டைக் காட்சிகள், பிரம்மாண்டமான காட்சிகள் அனைத்தையுமே இந்தப் படத்தில் காணலாம். தற்போது அதன் இறுதிகட்டப் பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
நீங்கள் அதிகமாக மெலடி பாடல்களைத்தான் இசையமைத்திருக்கிறீர்கள். குத்துப் பாடல்களை அதிகம் தரவில்லையே?
‘குட்டிப்புலி’, ‘நய்யாண்டி’ ஆகிய படங்களில் நானும் குத்துப் பாடல்கள் பண்ணியிருக்கிறேன். மக்கள் குத்துப் பாடல்களை திருப்பத் திரும்ப கேட்பதில்லை. மெலடி பாடல்களைத்தான் விரும்பிக் கேட்கிறார்கள். தெலுங்கில் ‘ரன் ராஜா ரன்’ என்று படம் செய்தேன். அங்கே அதன் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது. அதிலுள்ள பாடல்களை கேட்டுப் பாருங்கள். ‘இது ஜிப்ரானின் இசையா’ என்று வியந்துவிடுவீர்கள். தெலுங்கு திரையுலகுக்கு தேவையான இசை அதில் இருக்கும்.
சிலர் பாடல் வரிகளுக்கு இசையமைப்பார்கள், சிலர் தங்கள் இசைக்கு ஏற்றவாறு பாடல் வரிகள் வேண்டுமென்று கேட்பார்கள். நீங்கள் எப்படி?
இப்போதைக்கு இசைக்கு ஏற்றுவாறு பாடல் வரிகளை எழுதி வாங்கிக்கொள்கிறேன். ‘வாகை சூட வா’ திரைப்படத்தின் இயக்குநர் சற்குணம் என்னை கவிஞர் வைரமுத்துவிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர், ‘நீங்கள் புதுப்பையன். அதனால் இசையைக் கொடுத்து விடுங்கள்,அதற்கு ஏற்றவாறு நான் பாடல் வரிகளை எழுதி தருகிறேன்’ என்று கூறினார். ‘வாகை சூட வா’ படத்தின் பாடல்கள் எல்லாமே மெட்டு அமைத்து வரிகள் எழுதியவைதான். அது எனக்கு எளிதாக இருக்கிறது.
கமல் சாரோடு பணியாற்றும் போது, முதலில் இசை வருகிறதா, பாடல் வரிகள் வருகிறதா என்ற போட்டியே நிலவும். ஆகையால் எது முதலில் வந்தது என்பது யாருக்குமே தெரியாது. பேசிக் கொண்டே இருப்போம், முடிவில் பார்த்தால் ஒரு அருமையான பாடல் இசையோடு முடிவாகி இருக்கும்.
உங்களுடைய இசைப் பயணத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?
எங்கள் குடும்பம் கோயம்புத்தூரில் இருந்தது. அப்பாவுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வேலை தேடி சென்னைக்கு வந்தேன். நிறைய வேலைகள் செய்தேன். எனக்கு இசை மீது ஆர்வம் அதிகம். அதனால் இசைக் கல்லூரியில் படித்தேன். அதற்கு பிறகு நிறைய விளம்பரப் படங்களுக்கு இசையமைத்தேன். அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும் என்றால் சிங்கப்பூரில் உள்ள இசைக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்றார்கள்.
விளம்பரங்களுக்கு இசையமைத்ததன் மூலம் சம்பாதித்த மொத்த பணத்தையும் கட்டி சிங்கப்பூரில் இரண்டு ஆண்டுகள் படித்தேன். இங்கு வந்தவுடன் இயக்குநர் சற்குணம் எனக்கு வாய்ப்பளித்தார். அவரை எனக்கு விளம்பரப் படங்கள் மூலமாக ஏற்கனவே தெரியும். அன்று ஆரம்பித்த பயணம் ரசிகர்களின் ஆசியோடு தொடர்ந்துகொண்டிருக்கிறது.