சென்னையில் நாளை (வியாழக்கிழமை) மாலை நடைபெற இருக்கும் 'கத்தி' இசை வெளியீட்டு விழாவை முடக்குவதற்கு எதிர்ப்பாளர்கள் போராட்ட வியூகம் வகுத்துள்ளனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'கத்தி' படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சவின் ஆதரவு பெற்ற நிறுவனம், ஆகையால் தமிழ் திரையுலகில் இந்நிறுவனம் கால் ஊன்றக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியது.
அனிருத் இசையமைத்து இருக்கும் 'கத்தி' இசை வெளியீட்டு விழா நாளை மாலை சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற இருக்கிறது. இதற்கு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது தயாரிப்பு நிறுவனம்.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசுவிடம் கேட்டபோது, "ராஜபக்சவின் ஆதரவு பெற்ற நிறுவனம் தான் லைக்கா நிறுவனம். இந்த உண்மையை மூடி மறைக்க முயல்கிறார்கள். ஆதரவு இல்லை என்றால், எதற்காக இலங்கை அரசுடன் வியாபாரம் செய்து வருகிறார்கள். நாங்கள் முன்வைப்பது ஒன்றுதான். இலங்கை அரசுடன் தொழில் செய்துவரும் லைக்கா நிறுவனம் தமிழ் திரையுலகில் கால் ஊன்றக்கூடாது.
இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) சென்னையில் கமிஷனர் அலுவலகத்தில் 'கத்தி' இசை வெளியீட்டு விழா நடைபெறக் கூடாது என்றும், இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலையிட வேண்டும் என்று கூறியிருக்கிறோம். அதையும் மீறி 'கத்தி' இசை வெளியீட்டு விழா நடைபெற்றால் அவ்விழா அரங்கினை முற்றுகையிடுவோம்" என்று கூறினார்.
தமிழக வாழ்வுரிமை இயக்கம் என்ற பெயரில் சுமார் 100-க்கும் அதிகமான அமைப்புகளும் கட்சிகளும் தமிழக மக்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாகவும் அனைவருமே இந்த முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பர் என்றும் வன்னி அரசு மேலும் தெரிவித்தார்.
லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா, தங்களது நிறுவனத்திற்கு ராஜபக்சவிற்கும் சம்பந்தமில்லை என்று ஏற்கெனவே சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.