ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள ‘காஞ்சனா 3’, ஏப்ரல் 19-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகவா லாரன்ஸ் இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘காஞ்சனா 3’ (முனி 4). இந்தப் படத்தில் வேதிகா மற்றும் ஓவியா இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் லாரன்ஸே தயாரித்துள்ள இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், வருகிற ஏப்ரல் மாதம் 19-ம் தேதி படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை என்பதால், குழந்தைகளைக் குறிவைத்து படம் வெளியிடப்பட இருக்கிறது. ‘காஞ்சனா 2’ படமும் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு, கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கு மறுநாள் ‘காஞ்சனா 3’ ரிலீஸாக இருக்கிறது.