சின்மயிக்கு தொடர் வாய்ப்பு வழங்குவேன் என்ற கோவிந்த் வசந்தாவின் ட்வீட்டுக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற படம் '96'. இப்படத்தின் பாடல்களுக்காக கொண்டாடப்பட்டவர் கோவிந்த் வசந்தா. மேலும், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'காதலே காதலே' பாடல், இப்போதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைப் பாடியவர் சின்மயி.
மீடூ ஹேஷ்டேக் பிரச்சினைக்குப் பிறகு சின்மயிக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. மேலும், இதுதொடர்பாக நீதிமன்றம் வரை சென்று டப்பிங் யூனியன் தடையை நிறுத்தி வைத்திருக்கிறார் சின்மயி.
தற்போது ராதாரவியின் பேச்சு இணையத்தில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, “சின்மயி எனது படங்களில் பாடுவார். அவரே இனியும் நான் கோவிந்த வசந்தா இசையில் பாட விரும்பவில்லை என முடிவு செய்யும்வரை பாடுவார். எனது இந்த முடிவில் யாரும் தலையிடுவதற்கில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இந்த ட்வீட், தமிழ்த் திரையுலகினர் மத்தியில் மட்டுமன்றி, இணையவாசிகள் மத்தியிலும் பெரும் வைரலாகி வருகிறது. மேலும், "உங்களுக்குப் பட வாய்ப்பில்லை என்றால் என்ன செய்வீர்கள்?" என்று கோவிந்த் வசந்தாவைக் கேள்வி கேட்க, அதற்கு “நான் வாழ்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ராதாரவி பேச்சு குறித்து கோவிந்த் வசந்தா, “ராதாரவி வேடிக்கையானவர் என்று ஒரு பதிவு பார்த்தேன். தயவுசெய்து இதையெல்லாம் எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர் வேடிக்கையானவரல்ல. விஷமுள்ளவர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.