தமிழ் சினிமா

90 எம்.எல் பட சர்ச்சை: இயக்குநர் அனிதா உதீப் - தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் வார்த்தை மோதல்

ஸ்கிரீனன்

'90 எம்.எல்' பட சர்ச்சை தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் அனிதா உதீப் மற்றும்  தயாரிப்பாளர் தனஞ்ஜெயனுக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டது

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள படம் '90 எம்.எல்'. தணிக்கையில் 'ஏ' சான்றிதழ் கிடைத்துள்ள இப்படத்துக்கு சிம்பு இசையமைத்துள்ளார். பிப்ரவரி 1-ம் தேதி தமிழகமெங்கும் இப்படம் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியான போதே அதிலிருந்த காட்சிகள், வசனங்கள் முழுக்க ஆபாசமாகவும், இரட்டை அர்த்த வசனம் கொண்டதாகவும் இருப்பதாக நெட்டிசன்களும், தமிழ் சினிமா ஆர்வலர்களும் கடுமையாக விமர்சித்தனர்.

'90 எம்.எல்' வெளியான பின்பும் சமூகவலைத்தளத்தில் இப்படத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இது தொடர்பாக மருத்துவர் அபிலாஷா விமர்சனம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் “இயக்குநர் அனிதா உதீப்பும், தயாரிப்பாளர் உதீப்பும் டாக்டர் அபிலாஷாவின் இந்த நேர்மையான விமர்சனத்தைப் பார்த்து, அவர்களின் '90எம்.எல்' எப்படி சமூகத்தில் சீரழிவை ஏற்படுத்தும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கொஞ்சமாவது சமூக பொறுப்புடன் இருங்கள். இளைஞர்களிடையே விஷத்தைப் பரப்பி பணம் சம்பாதிக்காதீர்கள்" என்று தெரிவித்தார்.

இக்கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அனிதா உதீப் "அன்பார்ந்த தனஞ்ஜெயன் அங்கிள். நான் 'mr.சந்திரமௌலி’ போன்ற சமூகத்துக்குத் தேவையான படத்தை எடுத்து அதில் கில்மா பாடல்களை வைக்கவில்லை. ’90 எம்.எல்’ வயது வந்தவர்களுக்கான படம். அது எந்தவித வெட்கமுமின்றி பொழுதைப்போக்கும். நீங்கள் 'சேட்டை'யில் பேசியதைப் போல அசிங்கத்தைப் பற்றி பேசவில்லை. பெண்கள் அவர்கள் வாழ்வில் சந்திக்கும் அசிங்கத்தைப் பற்றி பேசியிருக்கிறேன்" என்று கூறினார்.

அனிதா உதீப்பின் கருத்துக்கு "எனக்கு புரிகிறது ஆன்ட்டி. பலரால் இந்தப் படம் எப்படி பார்க்கப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவே அந்த வீடியோவைப் பகிர்ந்தேன். வலைப்பேச்சு விமர்சனத்தையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். எங்கள் படங்களில் பெண்களை தரம் தாழ்த்துமாறு எந்த அசிங்கத்தையும் காட்டவில்லை. கவர்ச்சிப் பாடல்கள் இழிவில்லை. 90 எம் எல் படத்தில் வக்கிரமான வசனங்களும், காட்சிகளும் இழிவுதான்" என்று தனஞ்ஜெயன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார்.

ட்விட்டர் பக்கத்தில் '90 எம்.எல்' இயக்குநர் அனிதா உதீப் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் இருவருக்கும் நடைபெற்ற இந்த நேரடி மோதலால் சிறு சலசலப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT