'கடாரம் கொண்டான்' படத்தில் நாயகனாக நடித்தது மட்டுமன்றி, பாடலொன்றையும் பாடியுள்ளார் நடிகர் விக்ரம்.
'சாமி ஸ்கொயர்' படத்தைத் தொடர்ந்து ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் உருவாகிவரும் 'கடாரம் கொண்டான்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம், கமலின் ராஜ்கமல் நிறுவனம் மற்றும் ட்ரைடென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.
அக்ஷரா ஹாசன், அபு ஹாசன் உள்ளிட்ட பலர் விக்ரமுடன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு. சமீபத்தில் வெளியிடப்பட்ட இதன் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது இப்படத்தில் பாடலொன்றையும் பாடியுள்ளார் விக்ரம். இப்பாடல் ஒவ்வொரு நாளும் தொடங்கும் போது, கேட்கப்படும் ஊக்கப்பாடலாக அமையும் என்று இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
'கடாரம் கொண்டான்' பணிகளை முடித்துவிட்டு, பெரும் பொருட்செலவில் தயாராகும் 'மகாவீர் கர்ணா' படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் விக்ரம்.