'நடிப்பது கடினமான வேலை. இயக்குநர் ஷங்கர் விரும்பிக் கேட்டுக் கொண்டதற்காக 'ஐ' படத்தில் நடித்திருக்கிறேன்'' என்று தயாரிப்பாளரும் சிவாஜியின் மூத்த மகனுமான தயாரிப்பாளர் ராம்குமார் கூறியுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் தீபாவளி ரிலீஸாக வெளிவர உள்ள 'ஐ' படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா, செப்.15-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. உலகம் முழுக்க 15 மொழிகள், 1500 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருக்கும் இந்தப் படத்தில் 'பிசினஸ் மேன்' கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ராம்குமார் சிவாஜி கணேசன்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
நான் ஒரு தயாரிப்பாளர், நடிகன் அல்ல. நீண்ட காலத்துக்குப் பின் 'ஐ' படத்தில் நடித்தது புதுமையான அனுபவமாக இருந்தது. பிரம்மாண்ட படங்களை எடுக்கும் இயக்குநர் ஷங்கர் கேட்டுக் கொண்டாரே என்பதற்காகத்தான் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
கடந்த 1986-ம் ஆண்டில் சிவாஜி புரடக்ஷன் தயாரித்து பிரபு நடித்த 'அறுவடை நாள்' படத்தில்தான் கடைசியாக நடித்தது.
கடந்த 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தில் 'பிசினஸ்மேன்' கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். 'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கலந்துகொள்வதாக கேள்விப்பட்டேன். ஒரு தயாரிப்பாளராக படத்துக்கு செய்யும் 'எனி பப்ளிசிட்டி.. குட் பப்ளிசிட்டி' என்பதுதான் என் கருத்து. அந்த வகையில் அவர் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
படங்களைத் தயாரித்து முதலாளியாக இருப்பவன் நான். நடிப்பது ரொம்பவே கடினமான வேலை. மீண்டும் ஒரு படத்தில் நடிப்பேன் என்றெல்லாம் நினைத்து பார்க்கவே இல்லை. ஒரு பெரிய படம். அதில் நம்மோட பங்களிப்பும், அனுபவமும் சிறிய அளவில் இருக்கட்டுமே என்று சம்மதித்தேன். அவ்வளவுதான் இனி தொடர்ந்து நடிப்பதை பற்றியெல்லாம் நினைக்கவே இல்லை. அதுக்கு இயக்குநர், கதை என்று நிறைய விஷயங்கள் இருக்கிறதே''. இவ்வாறு ராம்குமார் கூறினார்.