நாகேஷ் குக்குநூர் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகவுள்ளது.
'நடிகையர் திலகம்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, கீர்த்தி சுரேஷுக்கு பல மொழிகளில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. அதிலிருந்து மிக கவனமாக தேர்வு செய்து ஒப்பந்தமாகி வருகிறார்.
'நடிகையர் திலகம்' படத்துக்குப் பிறகு ப்ரியதர்ஷன் இயக்கி வரும் 'மாராக்கர்' மற்றும் தெலுங்கில் நரேந்திரநாத் இயக்கி வரும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து இந்தியில் அறிமுகமாகவுள்ளார் கீர்த்தி சுரேஷ். இப்படத்தினை அமித் சர்மா இயக்கவுள்ளார்.
இந்நிலையில், புதிதாக நாகேஷ் குக்குநூர் இயக்கவுள்ளா படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ். முழுக்க பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தியே இப்படம் உருவாகவுள்ளது. மேலும், தமிழ் - தெலுங்கு - இந்தி என 3 மொழிகளிலும் தயாராகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படும் என தெரிகிறது.