'விக்ரம் வேதா’ தெலுங்கு ரீமேக் தொடர்பாக பரவிய வதந்திக்கு, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான படம் 'விக்ரம் வேதா'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து தெலுங்கு, இந்தி ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவியது. ஆனால், 'விக்ரம் வேதா' படத்தைத் தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனமே அனைத்து மொழிகளிலும் தயாரிக்க முன்வந்தது.
இந்நிலையில், 'விக்ரம் வேதா' தெலுங்கு ரீமேக்கில் பாலகிருஷ்ணா மற்றும் ராஜசேகர் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியானது. இது மிகவும் வைரலாக பரவியதைத் தொடர்ந்து ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' 'விக்ரம் வேதா' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பாலகிருஷ்ணா மற்றும் ராஜசேகர் நடிக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், அதில் உண்மையில்லை. யாரும் நம்ப வேண்டாம். எங்களிடம் தான் ரீமேக் உரிமையுள்ளது'' என்று தெரிவித்துள்ளது.