ரஜினியைப் பற்றி ஒரு வார்த்தையில் எல்லாம் கூற முடியாது என்று அவரோடு 'லிங்கா' படத்தில் நடித்து வரும் சோனாக்ஷி சின்கா கூறியுள்ளார்.
ரஜினி, சோனாக்ஷி சின்கா, அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'லிங்கா' படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கி வருகிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்து வருகிறார்.
பிரபல ஹாலிவுட் படங்களின் சண்டைப் பயிற்சியாளர் லீ வீட்டேகர் மேற்பார்வையில் தற்போது இப்படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் திங்கள்கிழமை கலந்துரையாடினார்.
அப்போது ரசிகர் ஒருவர் "ரஜினிகாந்த் பற்றி ஒரு வார்த்தையில் கூறுங்கள்" என்று கேட்டதற்கு, "ரஜினியை பற்றி ஒரு வார்த்தை எல்லாம் கூற முடியாது. ஊக்குவிப்பவர், எளிமையானவர், தொழிலில் நேர்த்தி மிக்கவர், அடக்கமானவர், சூப்பர் ஸ்டார்" என்று சோனாக்ஷி சின்கா குறிப்பிட்டார்.
க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் முடித்துவிட்டு, 'லிங்கா' படக்குழு பாடல்களை படமாக்க ஐரோப்பா செல்ல திட்டமிட்டு இருக்கிறது. ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி 'லிங்கா' வெளியாக இருக்கிறது.