தமிழ் சினிமா

சூர்யா - செல்வராகவனின் ‘என்.ஜி.கே.’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

செய்திப்பிரிவு

சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே.’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘என்.ஜி.கே.’  சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

சரத்குமார், ஜெகபதி பாபு, பாலா சிங், சம்பத் ராஜ், மன்சூரலிகான், முரளி சர்மா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் வெளியிடுகிறது.

நீண்ட நாட்களாகப் படப்பிடிப்பில் இருந்த இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 22-ம் தேதி இந்தப் படத்துக்கான டப்பிங்கைத் தொடங்கினார் சூர்யா.

காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இதன் டீஸர் ரிலீஸானது. இந்த டீஸருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படம் எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

‘ஒரு வாரத்துக்குள் படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்படும்’ என சமீபத்தில் ட்வீட்டினார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. அதைத் தொடர்ந்து தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 31-ம் தேதி உலகம் முழுவதும் ‘என்.ஜி.கே.’ வெளியாகும் என அவர் அறிவித்துள்ளார்.

‘நந்த கோபாலன் குமரன்’ என்பதன் சுருக்கம்தான் ‘என்.ஜி.கே.’ என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT