தமிழ் சினிமா

பா.இரஞ்சித் தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கும் ‘மெட்ராஸ்’ ஜானி

செய்திப்பிரிவு

பா.இரஞ்சித் தயாரிக்கும் மூன்றாவது படத்தில், ஹீரோவாக ‘மெட்ராஸ்’ ஜானி நடிக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநரான பா.இரஞ்சித், தன்னுடைய நீலம் புரொடக்‌ஷன்ஸ் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். இவர் தயாரிப்பில் வெளிவந்த முதல் படமான ‘பரியேறும் பெருமாள்’, ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது. மாரி செல்வராஜ் இயக்கிய இந்தப் படம், சாதிப் பிரச்சினையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.

‘பரியேறும் பெருமாள்’ படத்தைத் தொடர்ந்து ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்ற படத்தைத் தற்போது தயாரித்து வருகிறார் பா.இரஞ்சித். ‘அட்டகத்தி’ தினேஷ் ஹீரோவாக நடித்துவரும் இந்தப் படத்தை, அதியன் ஆதிரை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், பா.இரஞ்சித்தின் தயாரிக்கும் மூன்றாவது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில், ‘மெட்ராஸ்’ படத்தில் ஜானியாக நடித்த ஹரிகிருஷ்ணன் ஹீரோவாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ஒருவர் இந்தப் படத்தை இயக்குகிறார். ‘கபாலி’, ‘சண்டக்கோழி 2’, ‘வடசென்னை’ ஆகிய படங்களிலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஹரிகிருஷ்ணன்.

‘காலா’வைத் தொடர்ந்து, ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக வீரச் சமர் புரிந்த பழங்குடியின போராட்டக்காரர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதையை இயக்க இருக்கிறார் பா.இரஞ்சித். இந்தியில் உருவாகும் இந்தப் படத்தை, நமா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

SCROLL FOR NEXT