ட்ரெண்டிங்கில் முந்த முயற்சி செய்திருக்கிறார் என்று ராதாரவி சர்ச்சைப் பேச்சு குறித்து '90 எம்.எல்' பட இயக்குநர் அனிதா உதீப் தெரிவித்துள்ளார்.
'கொலையுதிர் காலம்' பத்திரிகையாளர் சந்திப்பில், நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய பேச்சு மிகவும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ் திரையுலகினர் பலரும் தங்களுடைய கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
ராதாரவியின் பேச்சு பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு திமுக நாளிதழான 'முரசொலி'யில் இடம்பெற்றுள்ளது. மேலும், திமுக தலைவர் ஸ்டாலினும் ராதாரவியின் பேச்சுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பெரும் சர்ச்சை உருவாக்கிய '90 எம்.எல்' படத்தின் இயக்குநர் அனிதா உதீப், ராதாரவி பேச்சு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ராதாரவி இந்த இண்டஸ்ட்ரியில் தான் ஒரு மிகப்பெரிய ஆணாதிக்கவாதி என்றும் அப்படி இருந்தாலும்கூட தன்னை யாரும் கண்டுகொள்வதே இல்லை என்று கவலைப்பட்டிருக்கிறார். இப்படியிருந்தும் கூட எனது ஜூனியர்கள் தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்கள். நான் அவர்களை எப்படி முந்துவது என நினைத்து இதனை செய்திருக்கிறார்.
அதனால்தான் தென்னிந்திய சினிமாவில் ஒரு வெற்றிகரமான பெண்ணை மேடையில் கொச்சைப்படுத்தி அவமானப்படுத்துவதன் மூலம் ட்ரெண்டிங்கில் முந்த முயற்சி செய்திருக்கிறார் போலும்.
இவ்வாறு '90 எம்.எல்' இயக்குநர் அனிதா உதீப் தெரிவித்துள்ளார்.