தமிழ் சினிமா

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா: மார்ச் 15-ம் தேதி படப்பிடிப்பு தொடக்கம்

செய்திப்பிரிவு

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தின் ஷூட்டிங், மார்ச் 15-ம் தேதி தொடங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சுராஜ் இயக்கத்தில் 2016-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘கத்தி சண்டை’. விஷால் - தமன்னா இருவரும் இந்தப் படத்தில் ஜோடியாக நடித்தனர். முக்கியக் கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்தார். தெலுங்கு மற்றும் இந்தியிலும் இந்தப் படம் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ‘கத்தி சண்டை’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக விஷாலுடன் ஜோடி சேர்கிறார் தமன்னா. விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.

இந்தப் படத்தின் ஷூட்டிங், கடந்த ஜனவரி மாதம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், சிம்புவை வைத்து சுந்தர்.சி இயக்கிய ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் ரிலீஸ் தாமதமானதால், படப்பிடிப்பு தள்ளிப்போனது.

மார்ச் முதல் வாரத்தில் தொடங்கப்பட இருந்த படப்பிடிப்பு, விஷாலின் ‘அயோக்யா’ பட ரிலீஸ் வேலைகளால் தள்ளிப்போய், தற்போது மார்ச் 15-ம் தேதி தொடங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைக்கிறார்.

SCROLL FOR NEXT