அரசியல் தாண்டி... நீங்கள் நீடூழி வாழ்க என்று ரஜினியை இயக்குநர் சேரன் வாழ்த்தியுள்ளார்.
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து, சென்னை திரும்பியுள்ளார் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த். மக்களவைத் தேர்தல் கூட்டணி சூடு பிடித்திருக்கும் வேளையில், அவரை நேற்று (பிப்.22) சந்தித்தார் ரஜினி.
"இப்போது அமெரிக்கா சென்றுவிட்டு நல்ல ஆரோக்கியத்துடன் வந்திருக்கிறார். பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. நல்ல மனிதர். அவர் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இந்தச் சந்திப்பில் துளி கூட அரசியல் இல்லை" என்று விஜயகாந்த் உடனான சந்திப்பு குறித்து ரஜினி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ரஜினி - விஜயகாந்த் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. விஜயகாந்தின் கன்னத்தில் தட்டிக் கொடுத்து, வணக்கம் வைத்துக் கிளம்புவது போல் அந்த வீடியோ இருந்தது.
இந்த வீடியோ பதிவு குறித்து இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
''இந்த மனிதநேயம்தான் ரஜினியிடம் எனக்குப் பிடித்த முதல் விஷயம்.. அவரின் தழுவலும் அவர் விஜயகாந்தின் கன்னத்தில் தொடும் உணர்வும் ஆயிரம் அர்த்தங்கள் சொல்கின்றன... கண்ணீர் வரவைக்கும் வீடியோ... தூர இருந்து உங்களை ரசிக்கிறேன் மதிக்கிறேன்... அரசியல் தாண்டி... நீங்கள் நீடூழி வாழ்க''.
இவ்வாறு இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.