அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள 'கே 13' படத்தின் இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தைத் தொடர்ந்து, பரத் நீலகண்டன் இயக்கி வந்த 'கே 13' படத்தில் கவனம் செலுத்த தொடங்கினார் அருள்நிதி. ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
எஸ்பி சினிமாஸ் தயாரித்து வரும் இப்படத்தின் இசையமைப்பாளராக தர்புகா சிவா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால், படத்தின் இறுதிகட்டப் பணிகள் அனைத்துமே முடிக்கப்பட்டு பின்னணி இசைக்கு கொடுத்தனர். அப்போது, தான் இயக்கவுள்ள படத்தின் பணிகளில் தர்புகா சிவா மும்முரமாக பணிபுரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், தர்புகா சிவாவுக்கு பதிலாக சாம் சி.எஸ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. தற்போது பின்னணி இசை மற்றும் பாடல்கள் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முழுக்க த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தை கோடை விடுமுறைக்கு திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.