தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவர் பதவியை நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் மீண்டும் சர்ச்சை உருவாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கிறது. இன்று (பிப்.2) மாலை சென்னையில் ’இளையராஜா 75’ நிகழ்ச்சி மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இன்று (பிப்.2) கலை நிகழ்ச்சிகளும், நாளை (பிப்.3) இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
சமீபத்தில் தனது துணைத் தலைவர் பதவியை இயக்குநர் கெளதம் மேனன் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அப்பதவிக்கு நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் நியமிக்கப்பட்டார். அவர் தான் 'இளையராஜா 75' நிகழ்ச்சி குறித்த பிரபலங்கள் சந்திப்பு உள்ளிட்ட விஷயங்களைக் கவனித்து வந்தார்.
தற்போது அவரும் தனது துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளார். 'இளையராஜா 75' நிகழ்ச்சிகள் தொடர்பான எந்தவொரு பத்திரிகையாளர் சந்திப்பிலுமே பார்த்திபன் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விசாரித்த போது, "இளையராஜா நிகழ்ச்சிக்கு முதலில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொள்ளாத சூழல் தான் இருந்தது. ஆனால், ஏ.ஆர்.ரஹ்மானை நேரில் சந்தித்து கண்டிப்பாக வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் பார்த்திபன். இதற்கான தனது வெளிநாட்டு நிகழ்ச்சிகளை தள்ளிவைத்துவிட்டு, ஏ.ஆர்.ரஹ்மான் வர சம்மதித்தார்.
நல்லபடியாக தான் பார்த்திபன் சார் பணிபுரிந்து வந்தார். அதனைத் தொடர்ந்து நடந்த சில நிகழ்வுகள் அவருக்கு உடன்படவில்லை. ஆகையால், ஏ.ஆர்.ரஹ்மான் வருவதை மட்டும் உறுதிப்படுத்திவிட்டு, ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டார்" என்று தெரிவித்தார்கள்.
'இளையராஜா 75' நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் "சுயம் பாதிக்கப்படும் போது, சோறு மூன்றாம் பட்சமே!" என்று ட்வீட்டினார்.
இதன் மூலம் தயாரிப்பாளர் சங்கத்தின் மீது அதிருப்தியில் இருப்பது உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து “இரு தினங்களுக்கு ...
இளையராஜா இசை கேட்டபடி
திசைதெரியாப் பயணம் -காரில்!
இசைக் கடலை
இசைப் புயல் வாழ்த்தும்
நாளைய நிகழ்வு -நீண்ட
நாளைய கனவு,
கண்கொள்ளா காட்சி!” என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் 'இளையராஜா 75' நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
தொடர்ச்சியாக பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வரும் தயாரிப்பாளர் சங்கம், பார்த்திபன் ராஜினாமா மூலமாக அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளது. 'இளையராஜா 75' நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்தவுடன், பார்த்திபன் தனது தரப்பு விளக்கத்தை அளிப்பார் எனத் தெரிகிறது.