தனுஷின் ‘அசுரன்’ படத்தில் நடிக்க இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘வடசென்னை’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி ‘அசுரன்’ படத்தில் இணைந்து பணியாற்றி வருகிறது. பூமணி எழுதியுள்ள ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. வி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.தாணு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
கடந்த மாதம் (ஜனவரி) 26-ம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோவில்பட்டியில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். மஞ்சு வாரியர் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கருணாஸின் மகன் கென் கருணாஸ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே ‘அழகு குட்டி செல்லம்’, ‘நெடுஞ்சாலை’ படங்களில் கென் நடித்துள்ளார்.
இந்நிலையில், இயக்குநர் பாலாஜி சக்திவேல் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘சாமுராய்’ படத்தின் மூலம் இயக்குநரான பாலாஜி சக்திவேல், ‘காதல்’, ‘கல்லூரி’, ‘வழக்கு எண் 18/9’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.