நல்ல கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று ஆர்ஜே பாலாஜிக்கு 'எல்.கே.ஜி' தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அறிவுரை வழங்கியுள்ளார்.
ஆர்ஜே பாலாஜி நாயகனாக அறிமுகமாகியுள்ள படம் 'எல்.கே.ஜி'. பிப்.22-ம் தேதி வெளியான இப்படத்தில் ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், சந்தான பாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் வெளியான 3 நாட்களிலேயே அனைத்து தரப்புக்கும் லாபத்தை ஈட்டியுள்ளது. இந்த சந்தோஷத்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு.
இதில் 'எல்.கே.ஜி' படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ஐசரி கணேஷ் பேசியதாவது:
''வேல்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்த முதல் படமான 'எல்.கே.ஜி' பெரிய வெற்றியைப் பெறும் என வெளியீட்டுக்கு முன்பே எதிர்பார்த்தோம். இயக்குநர் விஜய் மூலமாக பாலாஜியை எனக்கு சில வருடங்களாகவே தெரியும்.
அவர் என்னை அணுகி கதை சொன்னபோதே 'நீங்களே நடிங்க' என சொன்னேன். பல படங்கள் ஒரே நேரத்தில் தயாரிப்பில் இருந்தாலும், படப்பிடிப்பு எங்கு நடக்கிறது என்பது கூட எனக்குத் தெரியாது. ஆனால் பாலாஜி மட்டும் தினமும் தொலைபேசியில் பேசிவிடுவார்.
காமெடியனாக இருந்து நாயகனான நடிகர்கள் எல்லாம் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை மனதில் வைத்து, பாலாஜி நல்ல கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும். இருக்கும் விநியோகஸ்தர்களிலேயே மிகவும் நேர்மையானவர் என சக்திவேலனைச் சொன்னார்கள். அவர் கேட்ட விலை குறைவாக இருந்தாலும் அவருக்காக இந்தப் படத்தைக் கொடுத்தேன்.
'ஜெயம் ரவி படம்', 'ஜீவா படம்', 'தேவி 2', 'பப்பி' உள்ளிட்ட 5 படங்களை தயாரித்து வருகிறேன். இவை அடுத்தடுத்து இதே பேனரில் வெளியாகும்''.
இவ்வாறு ஐசரி கணேஷ் பேசினார்.