தமிழ் சினிமா

மனிதன் மனிதனாக இருப்பதற்குக் காரணம் திருமணம்: யாதும் தமிழே விழாவில் தம்பி ராமையா பேச்சு

செய்திப்பிரிவு

மனிதனை திருமண பந்தத்திற்குக் கொண்டுவர பெரியோர்கள் முயற்சி எடுத்தார்கள். இது ஒரு அறிவியல் புரட்சி. மனிதன் மனிதனாக இருப்பதற்குக் காரணம் திருமணம் என்று நடிகரும், இயக்குநருமான தம்பி ராமையா பேசினார்.

தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் கொண்டாடும் 'யாதும் தமிழே 2019' என்ற புதுயுகத் தமிழின் புதுவிதக் கொண்டாட்டம் கோவையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவின் ஒரு பகுதியாக இயக்குநர் சேரன் இயக்கும் 'திருமணம்- சில திருத்தங்கள்' என்ற திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. நடிகர் தம்பி ராமையாவும், அவரது மகனும், அப்படத்தின் நாயகனுமான உமாபதி ராமையா ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.

இதில் தம்பி ராமையா பேசியதாவது:

''இயல் இசை நாடகம் சார்ந்தவர்களுக்கு சிறப்பு செய்யும் சிறப்பான நிகழ்வை 'இந்து தமிழ்' நாளிதழ்செய்துள்ளது. நாடகத்திலிருந்துதான் சினிமா வந்தது. நாடகம் என்றால் திரைப்படமும் வரும். இந்து தமிழ் நடத்தும் பல நிகழ்வுகளில் நான் பங்கேற்றுள்ளேன். இதில் எனக்கு கூடுதல் சந்தோஷம்.  காரணம்  சேரன் இயக்கி எனது மகன் உமாபதி அதில் கதாநாயகனாக நடித்துள்ளார். நானும் அதில் இருக்கிறேன். ‘திருமணம் சில திருத்தங்களுடன்’ படம் மார்ச் 1 அன்று திரைக்கு வருகிறது.

ஒரு தனியார் அமைப்புதான் இதுபோன்ற விழாக்களை எடுத்துப் பாராட்டுவார்கள். ஆனால் 'இந்து தமிழ்' நாளிதழ் இத்தகைய நிகழ்வை நடத்தும்போது ஒரு தாய்மை கலந்த பாசம் ஏற்படுகிறது. காரணம் எங்கோ கிடந்தவர்களை அழைத்து வந்து அவர்களை அடையாளம் காட்டுகிறீர்கள்.

திருமணம் பற்றி பலருக்கும் பலருக்கும் பல எண்ணங்கள் இருக்கும். திருமணம் ஆகாதவர்கள் ஆனால் நன்றாக இருக்கும் என்று நினைப்பார்கள். திருமணம் ஆனவர்கள் ஏன்டா ஆச்சு என்று நினைப்பார்கள்.  மனிதனை திருமண பந்தத்திற்கு கொண்டுவர பெரியோர்கள் முயற்சி எடுத்தார்கள். இது ஒரு அறிவியல் புரட்சி. மனிதன் மனிதனாக இருப்பதற்குக் காரணம் திருமணம்.

திருமண பந்தம் ஒருவனை மனிதனாக்குகிறது. பிரம்மச்சாரிகள் சாதனையாளர்களாக இருந்தால் மட்டுமே இந்த உலகில் பாராட்டு கிடைக்கும். ஆனால் சம்சாரிகளுக்கு சம்சாரிகளாக இருந்தாலே சாதனைதான். திருமணம் செய்து சம்சாரியாக இருந்தாலே அது பாராட்டப்படும் விஷயம்.

நம்மைக் கடுப்பேற்றும் பலரைப் பற்றியும் நாம் கோபப்படும்போது எனக்கு மட்டும் கல்யாணம் ஆகாமல் இருந்திருந்தால் என்று கோபப்படுவோம். அப்படியானால் ஒரு மனிதனை நிதானத்துக்கு உள்ளாக்குவது திருமண பந்தம்.

'பாரதி கண்ணம்மா', 'தவமாய் தவமிருந்து', 'ஆட்டோகிராப்' போன்ற அற்புதமான படங்களை இயக்கிய சேரன் மீண்டும் நல்லதொரு படத்தை இயக்கியுள்ளார். ஆன்மிக வாதியாக இருந்தாலும், நாத்திகவாதியாக இருந்தாலும் சம்பாதித்தால் தன்பெயரில்தான் போட்டுக்கொள்கிறான் காரணம் பற்று, அதுபோன்றதுதான் பந்தம். அதை

சேரன் அற்புதமாக இந்தப் படத்தில் படைத்துள்ளார். இப்படத்தின் முன்னோட்டத்தை இந்நிகழ்வில் வெளியிடுகிறேன்.

தனித்துவம் மிக்க இளைஞர் உமாபதி ராமையா இந்தப்படத்தின் கதாநாயகன். நிலவைப் பார்த்து வானம் சொன்னது பாடலில் ஒரு வரி வரும். தந்தை தன்னையே தாய் தொடாவிடில் நீயும் இல்லையே நானும் இல்லையே என்ற பாடல் வரிகள். இப்படி ஒரு மகனைக் கொடுத்த என் மனைவிக்கு நன்றி சொல்கிறேன்''.

இவ்வாறு தம்பி ராமையா பேசினார்.

SCROLL FOR NEXT