இந்திய ராணுவ எல்லைக்குச் செல்லும் ராணுவ வீரரான ரசிகரிடம் போனில் பேசி, அவரை உற்சாகப்படுத்தியுள்ளார் நடிகர் விஜய்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்சினையால், காஷ்மீரில் பதட்டமான நிலை நிலவி வருகிறது. எனவே, விடுமுறையில் ஊருக்கு வந்துள்ள ராணுவ வீரர்கள், பணிக்குத் திரும்பி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். 2002-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தவர், கடந்த 17 ஆண்டுகளாக நாட்டுக்காக உழைத்து வருகிறார். இவர் விஜய் ரசிகரும் கூட.தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்குத் திரும்பிய தமிழ்ச்செல்வனுக்கு, காஷ்மீரில் நிலவிவரும் பதட்டமான சூழ்நிலையால் பணிக்குத் திரும்பிச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தன் மனைவி, குழந்தைகள், பெற்றோரிடம் கூட இந்தத் தகவலைத் தெரிவிக்காமல் கிளம்பிய தமிழ்ச்செல்வன், தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவர் பாண்டியிடம் பகிர்ந்துள்ளார்.
இந்தத் தகவலை விஜய் மக்கள் இயக்கப் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்திடம் பாண்டி பகிர, விஜய் காதுக்கு இந்தத் தகவல் எட்டியிருக்கிறது. உடனே தமிழ்ச்செல்வனை செல்போன் மூலம் தொடர்புகொண்டு பேசியுள்ளார் விஜய். “நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு எதுவும் ஆகாது. வெற்றியுடன் திரும்புவீர்கள். நீங்கள் திரும்பி வந்தவுடன் உங்களைச் சந்திக்கிறேன்” என விஜய் வாழ்த்தியுள்ளார்.