தமிழ் சினிமா

பாக்ஸர் அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் ரித்திகா சிங் ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

'பாக்ஸர்' படத்தில் அருண் விஜய்யுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ரித்திகா சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'தடம்' படத்தைத் தொடர்ந்து ‘மூடர் கூடம்’ நவீன் இயக்கி வரும் ‘அக்னிச் சிறகுகள்’, பிரபாஸ் உடன் ‘சாஹோ’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அருண் விஜய். இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த விவேக் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் அருண் விஜய்.

'பாக்ஸர்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் நடிப்பதற்காக மலேசியா மற்றும் வியட்நாமில் குத்துச்சண்டை பயிற்சி பெற்றுள்ளார் அருண் விஜய். சண்டைப் பயிற்சி இயக்குநரான பீட்டர் ஹெய்ன், அருண் விஜய்க்குப் பயிற்சி அளித்துள்ளார்.

பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் இப்படத்தில் நாயகியாக ரித்திகா சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நிஜவாழ்வில் குத்துச்சண்டை வீராங்கனையாக இருக்கும் ரித்திகா சிங் இப்படத்தில் விளையாட்டுச் செய்திகளைச் சேகரிக்கும் நிருபராக நடிக்கவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கப்படவுள்ளது. லண்டனைச் சேர்ந்த மார்கஸ் லுஜுங்பெர்ன் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.

SCROLL FOR NEXT