மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை என்று ரஜினி கூறியிருப்பதை, மறைமுகமாக சாடிப் பேசினார் கமல்ஹாசன்
ரஜினி எப்போது அரசியல் கட்சி தொடங்கி, முழுநேர அரசியல்வாதியாக வலம் வருவார் என்பது விடைதெரியாத புதிராகவே இருக்கிறது. ஆனால் 'ரஜினி மக்கள் மன்றம்' சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், மாவட்டச் செயலாளர்களுடன் சந்திப்பு என்று அடிக்கடி நடைபெற்று வருகிறது.
மக்களவைத் தேர்தலில் ரஜினி போட்டியிடுவார் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால் அவரோ, "வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. சட்டப்பேரவை தேர்தலே எங்களின் இலக்கு. அப்போது தேர்தலைச் சந்திப்பது என முடிவு செய்துள்ளோம். இந்த நாடாளுமன்றத் தேர்தலில், என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் இல்லை” என்று அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டார்.
ரஜினியின் இந்த முடிவை மறைமுகமாகச் சாடியிருக்கிறார் கமல். இது தொடர்பாக சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது கமல் கூறியிருப்பதாவது:
''மக்களவைத் தேர்தலில் ஏன் போட்டியிடுகிறீர்கள் எனக் கேட்கிறார்கள். எப்படி பங்கெடுக்காமல் இருக்க முடியும். மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை தேர்தல் இரண்டும் தனித்தனியா? அப்படியென்றால் தேசிய கீதம் பாடுவதற்கு அர்த்தம் என்ன?
டெல்லி இல்லாமல் தமிழ்நாடு தனியாக இயங்குவோம் என்று நினைக்கக் கூடாது. தமிழ்நாடு இல்லாமல் இயங்குவோம் என்று டெல்லியும் நினைக்கக் கூடாது. இந்த சத்தியத்தை செய்து கொண்டுதான் கொடியையே ஏற்றினோம். அதில் மாற்றங்கள் கொண்டுவர இயலாது. அதனால் தான் 40 மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
மத்தியில் யார் ஜெயித்தாலும் நம்மைப் பாதிக்கும். நான் இங்கு ஜெயித்து அங்கு போவது தமிழ்நாட்டுக்காக மட்டுமே. அங்கு போய் தான் ஆக வேண்டும். உடம்பில் கிட்னி கீழே தானே இருக்கு என்று விட்டுவிட்டு போய்விட முடியுமா? கிட்னி போய்விட்டால் தலை சுற்றிவிடும்.
கட்சி வேறு தொடங்கிவிட்டு, எண்ணெய் எல்லாம் தேய்த்து லங்கோடு எல்லாம் கட்டிக் கொண்டு, மூசையை எல்லாம் முறுக்கிக் கொண்டு கோதாவில் இறங்கியவுடன் 'இன்றைக்கு வேண்டாம்.. நாளைக்கு வருவேன்' என்று சொன்னால் என்னை மதிக்கமாட்டார்கள். தொடையை எல்லாம் தட்டினீர்களே என்று கேட்டால், சும்மா சத்தத்துக்காக என்று சொல்லிக் கொண்டு இருக்க முடியுமா?
இலை போட்டு சாப்பிட உட்கார்ந்த உடனே, 'டாக்டர் டயட் சொல்லியிருக்கார்' என்று சொன்னால், 'ஏன் உட்காரும் போது தெரியாதா?' என்று கேட்பார்கள். அப்புறம் ஏன்யா சாப்பிட வந்த என்று கேட்க மாட்டார்களா?''
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.