'எங்கேயும் எப்போதும்' இயக்குநர் சரவணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஜெய், அஞ்சலி, சர்வானந்த், அனன்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி, மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'எங்கேயும் எப்போதும்'. எம்.சரவணன் இயக்கத்தில் உருவான இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்க, ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிட்டது.
இப்படத்தைத் தொடர்ந்து 'இவன் வேறமாதிரி', 'வலியவன்' ஆகிய படங்களை இயக்கினார். அப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடித்த 'சக்ரவியூகா' படத்தை இயக்கினார். இப்படம் 'இவன் வேறமாதிரி' படத்தின் கன்னட ரீமேக்காகும்.
இடையே விபத்து ஏற்பட்டதால் சில காலம் ஓய்வில் இருந்தார். தற்போது மீண்டும் இயக்குநர் பணிக்குத் திரும்பியுள்ளார். முழுக்க நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து கதையொன்றை எழுதியுள்ளார். அக்கதையில் நடிக்க த்ரிஷா சம்மதம் தெரிவித்துள்ளார். தற்போது த்ரிஷாவுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
சரவணன் - த்ரிஷா இணையும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.