தமிழ் சினிமா

நிறைய இடங்களில் கண் கலங்கிவிட்டேன்: பேரன்பு படத்துக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு

ஸ்கிரீனன்

நிறைய இடங்களில் கண் கலங்கிவிட்டேன் என்று 'பேரன்பு' படம் பார்த்துவிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி, சாதனா, அஞ்சலி ராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பேரன்பு'. தமிழ் மற்றும் மலையாளத்தில் பிப்ரவரி 1-ம் தேதி வெளியாகியுள்ளது. 

யுவன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'பேரன்பு' பார்த்துவிட்டு பல்வேறு திரையுலகினர் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

இப்படம் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் கூறியிருப்பதாவது:

''அனைவருமே பார்க்கவேண்டிய படம். அவங்களுடைய உணர்வுகளை, உலகத்தை நம்மளும் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். மம்மூட்டி சாருடைய நிறைய படங்களைப் பார்த்திருக்கிறோம், ரசித்திருக்கிறோம். இதில் வேறு மாதிரியான ஒரு மம்மூட்டி சாரைப் பார்த்தேன்.

அவர் ஏன் ஒரு லெஜண்ட். இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என ஏன் சொல்கிறார்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம் 'பேரன்பு'. 'தங்கமீன்கள்' படத்தில் சாதனாவை துருதுருவான குழந்தையாகப் பார்த்தோம். இப்படத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் உணர்வுகளை, உணர்ச்சிகளை வெளிப்படுத்துக்கிற அப்படியொரு நடிப்பை வழங்கியுள்ளார். இன்னொரு தேசிய விருது அவருக்காக காத்திருப்பதாக நினைக்கிறேன்.

இயற்கையின் அழகையும், இரண்டு முக்கிய நடிகர்களின் நடிப்பையும் தேனி ஈஸ்வர் சாருடைய ஒளிப்பதிவில் பார்ப்பது இன்னும் பயங்கரமாக இருந்தது. ராம் சார் - யுவன் சார் இருவரும் இணைந்தால் நம் மனதின் ஆழத்தின் வரை சென்று தொட்டுவிடுவார்கள். அது பாட்டாக இருந்தாலும் சரி, பின்னணி இசையாக இருந்தாலும் சரி. இருவருக்கும் இடையே இருக்கும் புரிதல் தான், இப்படியொரு நல்ல படைப்பைக் கொண்டுவருவதாக நினைக்கிறேன். 

ராம் சார் இப்படத்தை எடுத்திருக்கும் விதம், உணர்ச்சிகள், உணர்வுகளைச் சொல்லியிருக்கும் விதத்தைப் பாராட்டத் தெரியவில்லை. நிறைய இடங்களில் கண் கலங்கிவிட்டேன். இப்படத்தைப் பார்த்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, இந்த உலகத்தில் இப்போது இருக்கும் சூழ்நிலையில் நாம் ஒருவர் மீது அன்பு வைத்தால் மட்டும் பத்தாது. பேரன்பு அவசியமாக இருக்கிறது. 

பேரன்பு அதிகமாக இருந்தால், இந்த வாழ்க்கை இன்னும் அழகாக இருக்கும் என்பதைத் தான் இப்படத்தைப் பார்த்து உணர்ந்தேன். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என் வாழ்த்துகள். மக்களிடமிருந்து இந்த பேரன்புக்கு, நிறைய பேரன்பு கிடைக்க ஆசைப்படுகிறேன்''.

இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT