பகவத் கீதை குறித்து தான் எந்தவொரு கருத்துமே தெரிவிக்கவில்லை என்று விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
'சீதக்காதி' படத்தைத் தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வந்த 'மாமனிதன்' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார் விஜய் சேதுபதி. இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார்.
இந்நிலையில், சென்னையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் செயலி அறிமுக விழாவில் விஜய் சேதுபதி பேசினார். அவர் பேசியது தனியார் தொலைக்காட்சியில் செய்தியாக வெளியானது. அதை சிலர் போட்டோஷாப்பில் மாற்றி, பகவத் கீதை குறித்து விஜய் சேதுபதி கூறியதாக மாற்றி வெளியிட்டார்கள்.
அதில், '' 'பகவத் கீதை' ஒன்றும் புனித நூல் கிடையாது. இன்றைய சீரழிவுக்கு இது போன்ற கற்பனையால் உருவாக்கப்பட்ட நூல்களே காரணம்'' என்று விஜய் சேதுபதி கூறியதாக போட்டோஷாப்பில் மாற்றப்பட்டு இருந்தது. இது வைரலாகப் பரவியது மட்டுமன்றி, பலரும் இக்கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இந்தக் கருத்து தொடர்பாக விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில், ''என் அன்பிற்குரிய மக்களுக்கு பகவத் கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலைப் பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாகப் பேசியதும் இல்லை, பேசவும் மாட்டேன். சில சமூக விரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது. எந்த சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்து கொள்ளவே மாட்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதியின் இந்த விளக்கத்தைத் தொடர்ந்து, பகவத் கீதை தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.