'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் விநியோக உரிமையை தயாரிப்பாளர் சசிகாந்த் புதிதாகத் தொடங்கியுள்ள 'YNOTX' நிறுவனம் கைப்பற்றியுள்ளது
தமிழ்த் திரையுலகில் 'தமிழ்ப் படம்', 'காவியத்தலைவன்', 'விக்ரம் வேதா', 'தமிழ்ப் படம் 2' என வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட படங்களைத் தயாரிக்கும் நிறுவனம் 'ஒய் நாட் ஸ்டூடியோஸ்'. இந்த நிறுவனம் தற்போது விநியோக துறையிலும் கால் பதித்துள்ளது.
ஒய் நாட் ஸ்டூடியோஸ், ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட், ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏபி இன்டர்நெஷனல் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து 'YNOTX மார்க்கெட்டிங் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன்' என்ற பிரிவைத் தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனம் நல்ல கதையம்சம் உள்ள படங்களை விநியோகம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
இதில் முதல் படமாக தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள 'சூப்பர் டீலக்ஸ்' படத்தை வெளியிடவுள்ளனர். விஜய் சேதுபதி, ரம்யா கிருஷ்ணன், பஹத் ஃபாசில், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார்.
படப்பிடிப்பு முடிந்தும், நீண்ட நாட்களாக இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது 'YNOTX' நிறுவனம் விநியோகத்தைக் கைப்பற்றியுள்ளதால், விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
'சூப்பர் டீலக்ஸ்' உரிமையைக் கைப்பற்றியுள்ளது குறித்து சசிகாந்த், "’சூப்பர் டீலக்ஸ்" படத்தின் மூலம் YNOTX, திரைப்பட விநியோக உலகத்தில் தடம் பதிப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய இடம் பெறும். மேலும், தமிழ் சினிமாவில் ஒரு புதிய பாதையையும் உருவாக்கும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பலரும் 'சூப்பர் டீலக்ஸ்' படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.