தமிழ் சினிமா

முதல் பார்வை: தில்லுக்கு துட்டு 2

உதிரன்

மாந்திரீகவாதியின் மகளை அவரது சம்மதத்துடன் மணம் முடிக்க நினைக்கும் இளைஞனின் கதையே 'தில்லுக்கு துட்டு 2'.

சென்னையில் சொக்கலிங்கம் நகரில் வசிக்கிறார் சந்தானம். ஆட்டோ ஓட்டுநரான இவர் இரவுப் பொழுதில் சரக்கடித்துவிட்டு அலப்பறையைக் கூட்டுகிறார். இதனால் எப்போதும் அவரது ஏரியாவாசிகள் பாதிக்கப்படுகின்றனர். சந்தானத்தின் டார்ச்சரைத் தாங்க முடியாமல் அவஸ்தைப்படும் டாக்டர் கார்த்திக், பிசியோதெரபிஸ்ட் ஷிர்தா சிவதாஸை  சந்தானத்திடம் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பங்களை திட்டமிட்டே உருவாக்குகிறார். கார்த்திக்கின் திட்டம் தெரியாமல் சந்தானமும் ஷிர்தாவிடம் காதலில் விழுகிறார். இந்த சூழலில் ஷிர்தா கேரளாவில் இருக்கும் மிகப்பெரிய மாந்திரீகவாதியின் மகள் என்பது தெரியவருகிறது.

பில்லி, சூனியம் என்று தீய சக்திகளை ஏவிவிடும் மாந்தீரிகவாதியை சந்தானம் எப்படி எதிர்கொள்கிறார், ஐ லவ் யூ என்று சொல்லும் எந்த இளைஞரையும் பேய் அடித்து துவம்சம் செய்வது ஏன், மாந்திரீகவாதியைத் தாண்டி சந்தானத்துக்கு வரும் ஆபத்துகள் என்ன, ஷிர்தா சந்தானத்தின் காதலை ஏற்றுக்கொண்டாரா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

'தில்லுக்கு துட்டு' மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம்பாலா இரண்டாம் பாகம் இயக்கியுள்ளார். அதே படக்குழு, காமெடி கலந்த பேய்ப்படம் என்ற ஜானரைத் தாண்டி முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் பெரிய ஒற்றுமையில்லை. படத்தில் அலறவைக்கும் பேயோ அல்லது அதிரவைக்கும் சிரிப்பின் ஓசையோ சிறிதும் இல்லை என்பது படத்தின் பெருங்குறை.

சந்தானம் தான் ஒரு ஹீரோ மெட்டீரியல் என்பதை நிரூபிக்க ரொம்பவே கஷ்டப்படுகிறார்.  தாடி,  ஸ்டைலான தோற்றம்,  டான்ஸ், சில கவுன்ட்டர் வசனங்களில் ஈர்க்கிறார். ஆனால், இன்னும் அந்த இரட்டை அர்த்த வசனங்கள், ஆண், பெண் அழகு தொடர்பான கேலிகளை விடாமல் இப்படத்திலும் தொடர்கிறார். அதுவே முகம் சுளிக்க வைக்கிறது. சந்தானத்தின் பலம் அவரது டிரேட்மார்க் நகைச்சுவைதான். ஆனால், இதில் அதுவும் மிஸ் ஆகிறது.

ஷிர்தா சிவதாஸுக்கு பார்க்க மட்டுமே வேலை. நடிக்க வாய்ப்பு இல்லை. விஜய் டிவி ராமருக்கு எந்த முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை. நான் கடவுள் ராஜேந்திரனும், ஊர்வசியும் மட்டுமே இரண்டாம் பாதியில் ஆறுதல் தரும் நடிகர்கள்.

தீபக்குமாரின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம் சேர்க்கிறது. ஷபீரின் இசையும், மாதவனின் படத்தொகுப்பும் படத்துக்குப் பாதகமான அம்சங்கள்.

சரக்கடித்துவிட்டு சலம்புவது, சொக்கலிங்கம் நகரைச் சார்ந்த ஏரியா ஆட்களிடம் லந்து பண்ணுவது என சந்தானத்தின் ஆரம்பகட்டப் பகுதிகள் அலுப்பையும் எரிச்சலையும் வரவழைக்கின்றன. படத்தின் கதைக்கு சம்பந்தமே இல்லாத பகுதிகள் நீட்டி முழக்கப்பட்டு பொறுமையைச் சோதிக்கின்றன. முதல் பாதி முழுக்க  சுவாரஸ்யம் இல்லாமல் நகர்கிறது.  படம் எதை நோக்கிச் செல்கிறது என்ற தெளிவே இல்லாமல் திசை தெரியாமல்  திணறி நிற்கும் திரைக்கதை ஒருவழியாக இடைவேளையில் மையப்புள்ளியை வந்தடைகிறது. ஆனால், அதற்குப் பிறகும் எந்த புத்திசாலித்தனமும் படத்தில் இல்லை.

மாந்தீரிகவாதிகளின் போலி பிம்பம் மட்டும் திரைக்கதையின் திருப்பத்துக்குப் பயன்பட்டது. பேய்க்கான பின்னணியில் ஓலைச்சுவடி, ஆங்கிலேயர் ஜார்ஜ், மார்த்தாண்ட வர்மாவின் மாந்திரீகம் என்று காட்சியப்படுத்தியதில் நம்பகத்தன்மை இல்லை. பீதி இல்லாத, நகைச்சுவையும் அவ்வளவாக எடுபடாத அளவுக்கு ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் ராம்பாலா. இயக்குநர் கதாபாத்திரக் கட்டமைப்பிலும், கதை, திரைக்கதையிலும் கவனம் செலுத்தாததால் முழுமையான படம் பார்க்கும் அனுபவத்தைத் தரத் தவறியிருக்கிறது 'தில்லுக்கு துட்டு 2'.

SCROLL FOR NEXT