'96' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பிரச்சினை இருப்பதாக வெளியாகியுள்ள செய்திக்கு படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.
2018-ம் ஆண்டில் இளைஞர்கள் கொண்டாடிய படம் '96'. பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர். கோவிந்த் வசந்தா இசையமைப்பாளராகப் பணிபுரிந்தார்.
100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை கடும் போட்டுக்கு இடையே தயாரிப்பாளர் தில் ராஜு கைப்பற்றினார்.
பிரேம்குமார் இயக்கவுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சர்வானந்த், த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
தெலுங்கில் கோவிந்த் வசந்தாவே இசையமைப்பாளராக பணிபுரிய ஒப்பந்தமானார். அவருக்குப் பதிலாக வேறொருவரை ஒப்பந்தம் செய்யலாம் என்று தயாரிப்பு நிறுவனம் கருதுவதாகவும், அதற்கு இயக்குநர் பிரேம்குமார் மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும், இதனால் '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கல் நிலவுவதாகவும் குறிப்பிட்டார்கள்.
இது தொடர்பாக விசாரித்த போது, "எந்தவொரு சிக்கலுமே இல்லை. கோவிந்த வசந்தா தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் எதுவுமே தெரிவிக்கவில்லை. அவரும் இயக்குநரும் இணைந்து தெலுங்கு ரீமேக்கிற்காக 2 பாடல்களை கம்போஸிங் செய்து முடித்துவிட்டார்கள். பள்ளி மாணவர்களாக நடிக்கவுள்ளவர்களின் தேர்வும் முடிந்துவிட்டது. ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்கப்படும்" என்று தெரிவித்தனர்.