மாதவன் - அனுஷ்கா இணைந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங், அடுத்த மாதம் (மார்ச்) தொடங்க இருக்கிறது.
‘பாகுபலி’ மற்றும் ‘பாகமதி’ படங்களைத் தொடர்ந்து அனுஷ்கா எந்தப் படத்தில் நடிக்கப் போகிறார் என மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக ஏற்றிய எடையைக் குறைக்க முடியாமல் அவதிப்பட்ட அனுஷ்கா, எந்தப் படத்திலும் நடிக்காமல் எடையைக் குறைப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது எடையைக் குறைத்து மீண்டும் பழைய உடல்வாகுக்குத் திரும்பியுள்ள அனுஷ்கா, போட்டோஷூட் நடத்தித் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டார். அதைப் பார்த்துப் பலரும் தங்களுடைய பாராட்டுகளை அனுஷ்காவுக்குத் தெரிவித்தனர்.
இந்நிலையில், அனுஷ்கா நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து மாதவன் நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கெனவே ‘ரெண்டு’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இதுதான் அனுஷ்கா நடித்த முதல் தமிழ்ப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹேமந்த் மதுகர் இயக்கும் இந்தப் படம், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது. கோபி மோகன் மற்றும் கோனா வெங்கட் இருவரும் இணைந்து இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர். மேலும், இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராகவும் கோனா வெங்கட் பணியாற்றுகிறார்.
மாதவன், அனுஷ்காவுடன் இணைந்து அஞ்சலி, ஷாலினி பாண்டே இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சைலன்ட் சஸ்பென்ஸ் த்ரில்லரான இந்தப் படத்தில், பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்ற இருக்கின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு, மார்ச் மாதம் தொடங்க இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கோனா வெங்கட்.