மீண்டும் உடல் எடையைக் குறைத்து பழைய நிலைக்குத் திரும்பியுள்ள அனுஷ்காவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அனுஷ்கா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பாகமதி’. 2018-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி இப்படம் வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் தெலுங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
'பாகமதி' படத்துக்குப் பிறகு அனுஷ்கா வேறெந்த படத்திலும் நடிக்கவில்லை. காரணம், அவருடைய உடல் எடை. ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக ஏற்றிய எடை, குறையவே இல்லை. யோகா, டயட் உள்ளிட்ட பலவகையில் முயற்சி செய்த போதும் அனுஷ்காவின் எடை குறையவே இல்லை.
இதனால் அனுஷ்கா எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. படத்திலும் நடிக்காமல் இருந்தார். தற்போது அதற்கான காரணம் என்னவென்பது தெரியவந்துள்ளது.
உலக அளவில் பிரபலமான வாழ்க்கைமுறைப் பயிற்சியாளர் மற்றும் நிபுணர் லூக் கொடினோ மூலமாக தன் உடல் எடையைக் குறைத்து மீண்டும், பழைய நிலைக்குத் திரும்பியுள்ளார் அனுஷ்கா.
அவருடைய புதிய போட்டோஷூட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது. பலரும் அவரது உடல் எடை குறைப்புக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அனுஷ்காவின் உடல் எடை குறைப்பு குறித்து லூக் கொடினோ "அற்புதமான, அழகான, எளிமையான, பணிவான, இனிமையான அனுஷ்கா ஷெட்டி. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை புதிய மதமாக்கி, தேசத்தின் ஆரோக்கியத்தை மாற்றுவதற்கு எங்களிடம் திட்டமும், நோக்கமும் உள்ளது. உங்கள் அனைவரின் ஆதரவும், ஆசிர்வாதமும், அன்பும் எங்களுக்குத் தேவை. கிடைக்குமா?" என்று கேட்டுள்ளார்.
மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட நடிகர்களுடன் ஹாலிவுட் நடிகர்களும் நடிக்கும் 'சைலன்ஸ்' படத்தில் நடிக்க அனுஷ்கா தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். இது வசனமே இல்லாத படம் என்பதால், அனைத்து மொழிகளிலும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.