கே.வி.ஆனந்த் இயக்கிவரும் ‘காப்பான்’ படப்பிடிப்பில், மோகன்லாலின் போர்ஷன் நிறைவடைந்தது.
‘கவண்’ படத்துக்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கிவரும் படம் ‘காப்பான்’. இதில், ஹீரோவாக சூர்யா நடித்து வருகிறார். ‘அயன்’ மற்றும் ‘மாற்றான்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இருவரும் இணைந்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.
மோகன்லால், பொமன் இரானி, ஆர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தில், ஹீரோயினாக சயிஷா நடிக்கிறார். ஆக்ஷன் த்ரில்லராக உருவாகிவரும் இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
லண்டனில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, பல்வேறு இடங்களிலும் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், மோகன்லால் சம்பந்தப்பட்டக் காட்சிகள் நிறைவடைந்தன. இந்தத் தகவலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கே.வி.ஆனந்த்.
சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள ‘என்.ஜி.கே’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி இருவரும் நடித்துள்ளனர்.