'அசுரன்' படத்தில் தனுஷுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கருணாஸ் மகன் கென் கருணாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி 'வடசென்னை 2' படத்துக்கு முன்பாக 'அசுரன்' என்ற படத்தில் இணைந்து பணிபுரிந்து வருகிறது. இப்படத்தை தாணு தயாரித்து வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் கெட்-அப்புக்காக முடியை எல்லாம் வெட்டி நடித்து வருகிறார் தனுஷ். மஞ்சு வாரியர் நாயகியாக நடித்து வருகிறார். அவர் தமிழில் நடிக்கும் முதல் படமாக 'அசுரன்' அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கருணாஸ் மகன் கென் கருணாஸை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. 'அழகு குட்டி செல்லம்', 'நெடுஞ்சாலை' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கென் கருணாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிமாறன் இயக்கம், தனுஷ் நாயகன் என்பதால் இப்படம் கண்டிப்பாக கென் கருணாஸுக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் கருணாஸ்.
இப்படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். 'அசுரன்' படத்தைத் தொடர்ந்து சத்யஜோதி தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் தனுஷ்.