சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் 15-வது படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.
சிவகார்த்திகேயன் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு ‘Mr. லோக்கல்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் ‘Mr. லோக்கல்’ படத்தில், ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. வருகிற கோடை விடுமுறையில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதே சமயத்தில், ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் இயக்கும் சயின்ஸ் பிக்ஷன் படத்திலும் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்தப் படங்களைத் தொடர்ந்து, ‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இது அவருடைய 15-வது படமாகும். இந்தப் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடிக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு, மார்ச் மாதம் தொடங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.