தமிழ் சினிமா

குறும்படம், ஆவணப்படம் எடுக்க தயாரிப்பு செலவை ஏற்கும் தமிழ் ஸ்டுடியோ

செய்திப்பிரிவு

தமிழ் ஸ்டுடியோவின் IFFC (சென்னை சுயாதீன திரைப்பட விழா) ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது. இந்தியாவின் முதல் முன்னெடுப்பான விழாவாக இதனை திரைப்பட ஆர்வலர்கள் கொண்டாடி வருகின்றனர்.  இந்த ஆண்டு IFFC விழா சென்னையில் பிப்ரவரி 8,9,10 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இதனை முன்னிட்டு ஒரு முக்கிய அறிவிப்பை  தமிழ் ஸ்டுடியோ வெளியிட்டுள்ளது.

தமிழ் எழுத்தாளர்கள், இயக்குநர்கள், வரலாற்று அறிஞர்கள், களப்பணியாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் போராளிகள், சுற்றுச்சூழல் பிரச்சனைகள்  சார்ந்து ஆவணப்படமோ, குறும்படமோ எடுக்க தமிழ் ஸ்டுடியோ தயாரிப்பு செலவை ஏற்றுக்கொள்ளும்.

மேற்சொன்ன பிரிவுகளில் படம் எடுக்க விரும்புபவர்கள், குறிப்பிட்ட அந்தப் பிரிவு சார்ந்து இதுவரை திரட்டியிருக்கும் தரவுகள், அது சார்ந்த முழுமையான ஆய்வுகள், படத்திற்கான திரைக்கதை, அல்லது தரவுகள், இயன்றால் சிறு முன்னோட்டமாக காட்சி வடிவில்  சமர்ப்பிக்க வேண்டும்.

IFFC விழாவில் தரவுகளைக் சமர்ப்பிக்க தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கும். அங்கே வந்து மேற்சொன்ன தரவுகள், ஆய்வு முடிவுகள், முன்னோட்டக் காட்சிகள் அடங்கிய டிவிடியைச் சமர்ப்பிக்கலாம். பல கட்ட ஆய்வுகள், நேர்காணலுக்குப் பிறகு படம் தயாரிக்க தேவையான பணத்தை தமிழ் ஸ்டுடியோ திரட்டிக் கொடுக்கும். இதில் பங்கேற்க விரும்பும் நண்பர்கள் முன்கூட்டியே பியூர் சினிமா அலுவலகத்தை தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

குறும்படம் அல்லது ஆவணப்படம் அடுத்த ஆண்டு IFFC விழாவிற்கு முன் எடுக்கப்பட்டு, IFFC விழாவில் போட்டியில்லாத பிரிவில் திரையிடப்படும்.

இதற்கென கட்டணம் எதுவுமில்லை. முழுக்க முழுக்க சுயாதீன சினிமாவை வளர்த்தெடுக்க தமிழ் ஸ்டுடியோ மேற்கொள்ளும் முயற்சி இது.

முன்பதிவு செய்ய: 9840644916

SCROLL FOR NEXT