அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படத்துக்கு 'சிந்துபாத்' என்று தலைப்பிட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.
‘பண்ணையாரும் பத்மினியும்’, 'சேதுபதி' என விஜய் சேதுபதியை வைத்து இரண்டு படங்களை இயக்கியவர் அருண்குமார். இதில், 'சேதுபதி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அப்படத்தைத் தொடர்ந்து அருண்குமார் பல்வேறு நாயகர்களை சந்தித்து கதை கூறிவந்தார்.
இறுதியாக, மூன்றாவது முறையாக அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியானது. அஞ்சலி நாயகியாக நடிக்கும் இப்படத்தை ராஜராஜன் மற்றும் ஷான் சுதர்சன் தயாரித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இன்று (ஜனவரி 16) விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. 'சிந்துபாத்' என்று படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென் பகுதிகள் மற்றும் மலேசியாவில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.