கட்-அவுட் எல்லாம் வேண்டாம். அப்பணத்தில் குடும்பத்தினருக்கு உடைகள் எடுத்துக் கொடுங்கள் என்று ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா, ரம்யா கிருஷ்ணன், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வந்தா ராஜாவாதான் வருவேன்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பிப்ரவரி 1-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சமீபகாலமாக, தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்கள் வரும் போது எவ்வளவு பெரிய கட்-அவுட் வைப்பது என்ற போட்டி நிலவும். அதற்கு பால் ஊற்றுவது, மாலை அணிவிப்பது என பெரும் பணத்தை ரசிகர்கள் செலவழிப்பார்கள்.
தற்போது 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்துக்கு கட்-அவுட் எல்லாம் வைக்க வேண்டாம் என்று சிம்பு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று (ஜனவரி 15) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிம்பு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
'' 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் பிப்ரவரி 1-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. இயக்குநர் சுந்தர்.சி சாருக்கு பெரிய நன்றி. எப்போதுமே ஸ்டார் படங்கள் திரைக்கு வரும்போது அதிகமாக காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. திரையரங்கில் கவுண்டரில் என்ன விலை டிக்கெட் விற்கிறார்களோ, அந்த விலைக்கு வாங்கிப் பாருங்கள்.
படத்துக்கு ப்ளக்ஸ் வைப்பதோ, அந்த ப்ளக்ஸுக்கு பால் அபிஷேகம் பண்ணுவதோ வேண்டாம். அதற்குப் பதிலாக அம்மாவுக்குப் புடவை, அப்பாவுக்கு சட்டை மற்றும் தம்பி தங்கைக்கு இனிப்புகள் என உங்களால் முடிந்ததை வாங்கிக் கொடுங்கள். அவர்களுக்குக் கொடுப்பதை படங்களாகவோ இல்லையென்றால் வீடியோவாகவோ போட்டால் அதை விட எனக்கு வேறு சந்தோஷம் இல்லை.
பேனர் கட்-அவுட் வைத்து மாஸ் கெத்து காண்பிப்பது முக்கியமில்லை. நான் படத்தில் நன்றாக நடித்து, ரசிகர்கள் ஆகிய உங்கள் பெயரைக் காப்பாற்ற வேண்டும். எனக்காக நீங்க செய்யுங்கள். இது என் வேண்டுகோள்''.
இவ்வாறு சிம்பு தன் வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.