மதுரையில் போலீஸிடம் அடி வாங்கினேன் என்று 'அடங்க மறு' பத்திரிகையாளர் சந்திப்பில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். குறிப்பிட்டார்
டிசம்பர் 21-ம் தேதி வெளியான படங்களில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'அடங்க மறு'. புதுமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜெயம் ரவி, ராஷி கண்ணா, அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.
5 படங்களுள் 'அடங்க மறு' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து படக்குழு பத்திரிகையாளர்களைச் சந்தித்தது. இச்சந்திப்பில் ஒட்டுமொத்த படக்குழுவினருமே கலந்து கொண்டார்கள்.
இவ்விழாவில் நாயகன் ஜெயம் ரவி பேசும் போது, "இப்படத்தின் விமர்சனங்களைப் படித்த போது பத்திரிகையாளர்கள் மீதான மரியாதை பல மடங்கு அதிகமாகியுள்ளது. கதை என்ன இருந்தாலும் அதைக் கொடுக்கும் விதம் மிக முக்கியம். இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கான அனைத்து பாராட்டகளும் கார்த்திக்குக்கு மட்டுமே. நான் கதையை நம்பியதை விட கார்த்திக்கை நம்பினேன். எல்லோரிடமும் பேசி மயக்கி வேலை வாங்கி விடுவார். இந்த மொத்த குழுவுடன் மீண்டும் இன்னொரு படத்தில் இணைய வேண்டும் என ஆசைப்படுகிறேன்" என்று பேசினார்.
படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பேசும் போது, "நான் இசையமைத்த எந்தப் படத்துக்கும் இதுவரை தியேட்டர் விசிட் போனதில்லை. இப்படத்துக்கு இயக்குநரும், ஜெயம் ரவி சாரும் அழைத்ததால் சென்றேன். மதுரையில் மிகப்பெரிய கூட்டத்தில் நெரிசலைக் கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டிய போலீஸிடம் அடி வாங்கினேன். ஒரு படத்தின் உண்மையான வெற்றி எங்கு தெரியும் என்றால் தியேட்டரில் தான் தெரியும். அதை நான் என் கண்ணாலேயே பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று பேசினார்.
படத்தின் இயக்குநர் கார்த்திக் தங்கவேல் பேசும் போது, "ஜெயம் ரவி எனக்கு இப்போதும் ஒரு நல்ல குருவாக இருக்கிறார். என்னை வழிநடத்துகிறார். என்னை எப்போதும் ஊக்கப்படுத்துவார். அடுத்து ஒரு பெரிய படத்தை திட்டமிட்டு வருகிறோம். அதை சரியான நேரத்தில் அறிவிப்போம். என்னை விட அதிகம் உழைத்தது உதவி இயக்குனர்களாக இருந்த என் நண்பர்கள் தான். தியேட்டர் விசிட் போனபோது நிறைய பெண்கள் மிகவும் படத்தோடு ஒன்றி பேசினார்கள். சாம் சி.எஸ் அடிவாங்கிய போது வேண்டுமென்றே வேடிக்கை பார்த்தேன். பிறகு போலீஸாரிடம் அவர் தான் இப்படத்தின் இசையமைப்பாளர் என தெரிவித்தேன்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார் இயக்குநர் கார்த்திக் தங்கவேல்.