'பொன்னியின் செல்வன்' சரித்திர நாவல் வெப் சீரிஸாக உருவாகிறது. இதனை எம்.எக்ஸ். ப்ளேயர் நிறுவனத்துடன் இணைந்து செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கிறார்.
'கோச்சடையான்' மற்றும் 'வேலையில்லா பட்டதாரி 2' ஆகிய படங்களை இயக்கியவர் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த். மேலும், பல படங்களுக்கு கிராபிக்ஸ் மேற்பார்வையாளராகவும் பணிபுரிந்துள்ளார்.
தற்போது எம்.எக்ஸ். ப்ளேயர் நிறுவனத்துடன் இணைந்து செளந்தர்யா ரஜினிகாந்த் 'பொன்னியின் செல்வன்' சரித்திர நாவலை வெப் சீரிஸாக உருவாக்கவுள்ளார். எம்.எக்ஸ். ப்ளேயர் செயலியில் வெளியாகவுள்ள இதனை சூர்யபிரதாப் இயக்கவுள்ளார்.
இது தொடர்பாக செளந்தர்யா ரஜினிகாந்த், "இந்த வெப் சீரிஸ், பல்லாண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த சோழ அரச பரம்பரையின் ஆட்சிக் காலத்தைப் பற்றிய விறுவிறுப்பும், வீரமும், தொன்மையும், காதல் மற்றும் நகைச்சுவையும் கலந்த காவியமாக இருக்கும். இது ஒரு பரவசமான பொழுதுபோக்காக அமையும்.
எம்.எக்ஸ். ப்ளேயர் உலக அளவில் தினசரி 70 மில்லியன் பயனாளிகளையும், இந்தியாவில் 360 மில்லியன் பதிவிறக்கங்களையும் கொண்டுள்ளது. நான்கில் ஒரு ஸ்மார்ட் போன்களில் செயல்பாட்டில் உள்ளது" என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிமுக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள்.
மேலும், பிப்ரவரி 11-ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் 2-வது திருமணம் நடைபெறவுள்ளது. சௌந்தர்யா தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனைத் திருமணம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.