அதர்வா நடித்துவரும் ‘குருதி ஆட்டம்’ படத்தில், அஜித் ரசிகராக நடிக்கிறார்.
‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஸ்ரீகணேஷ். அவருடைய இரண்டாவது படம் ‘குருதி ஆட்டம்’. அதர்வா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படம், மதுரையில் உள்ள கேங்ஸ்டர்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது.
அதர்வா ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்க, ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். அத்துடன், தன்னுடைய ‘யு 1 ரெக்கார்ட்ஸ்’ நிறுவனத்தின் மூலம் இசை உரிமையையும் வாங்கியுள்ளார் யுவன்.
இந்தப் படத்தில், அஜித் ரசிகராக நடிக்கிறார் அதர்வா எனத் தகவல் வெளியாகியுள்ளது. நிஜத்திலும் அஜித் ரசிகர்தான் அதர்வா. நிகழ்ச்சி ஒன்றில் அஜித்துடன் அதர்வா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை, செட் பிராப்பர்ட்டியாக அதர்வா வீட்டில் மாட்டியிருக்கிறது படக்குழு. அந்தப் புகைப்படத்தைப் பார்த்து அதர்வாவே ஆச்சரியப்பட்டுப் போயிருக்கிறார்.
அஜித் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்தின் ரிலீஸ் காட்சியை, ‘குருதி ஆட்டம்’ படத்துக்காக 6 மாதங்களுக்கு முன்பே படமாக்கிவிட்டனர். அந்தக் காட்சி, படத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் என்கிறார்கள்.
அஜித் ரசிகராக மட்டுமின்றி, கபடி வீரராகவும் நடித்துள்ளார் அதர்வா.