தமிழ் சினிமா

பேட்ட vs ’விஸ்வாசம்’: முதல் நாள் வசூல் நிலவரங்கள்

ஸ்கிரீனன்

ரஜினியின் 'பேட்ட' மற்றும் அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தின் முதல் நாள் வசூல் நிலவரங்கள் என்னவென்று வெளியாகியுள்ளது.

உலகமெங்கும் நேற்று (ஜனவரி 10) 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய படங்கள் வெளியாகின. ரஜினி, அஜித் ரசிகர்கள் இதனை திருவிழா போல கொண்டாடி மகிழ்ந்தார்கள். சில இடங்களில் மோதலும் நடைபெற்றது.

இரண்டில் யார் வெற்றி, எது வசூலில் அதிகம் என்று ரஜினி - அஜித் ரசிகர்கள் கடும் போட்டியிட்டு வருகிறார்கள். இதே கேள்வியை இப்படங்களை வாங்கி வெளியிட்டுள்ள சில முன்னணி விநியோகஸ்தர்களிடம் முன்வைத்தோம். அவர்கள் கூறிய பதில்களின் தொகுப்பு:

இரண்டு படமுமே நல்ல விதமாக போய் கொண்டிருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை 'பேட்ட' படத்தின் வசூல் 1 கோடியைத் தாண்டியுள்ளது. 'விஸ்வாசம்' வசூல் 1 கோடிக்குள் தான் வந்துள்ளது. ஆனால், பி மற்றும் சி சென்டர்கள் என கூறப்படும் இதர பகுதிகள் வசூலைப் பார்த்தால் தமிழகத்தில் 'விஸ்வாசம்' தான்  அதிகம். இந்த வசூலை விட சுமார் 4 கோடி குறைவாகவே ’பேட்ட’ வசூல்  இருக்கும்.

'பேட்ட' படத்தின் ஓடும் நேரம் 2 மணி நேரம் 51 விநாடிகள். இது கொஞ்சம் மைனஸ் தான். ஏனென்றால், அதிக காட்சிகள் திரையிட முடியாது. இடைவேளை எல்லாம் விட்டு, ஒரு காட்சி முடியவே குறைந்தது மூன்றரை மணி நேரமாகும். இதனால், குறைவாக காட்சிகளே திரையிட இயலும்.

மேலும், தமிழகத்தின் மொத்த வசூலில் 'பேட்ட' இரண்டாவது இடத்திலிருந்தாலும் உலகளவில் அது தான் நம்பர் ஒன்னில் இருக்கிறது. அமெரிக்காவில் 750K டாலர்கள் வசூல் செய்து, விரைவில் 1 மில்லியன் டாலர்கள் வசூல் செய்யவுள்ளது 'பேட்ட'. ஆனால் 'விஸ்வாசம்' படமோ இதுவரை 83K டாலர்கள் தான் வசூல் செய்துள்ளது.

தற்போதுள்ள சூழலில் எது அனைத்து தரப்புக்கும் லாபகரமான படமாக இருக்கும் என்பதை கணிக்க முடியாது. ஏனென்றால், இப்போது வரை 2 படங்களுக்குமே டிக்கெட் ப்ரஷர் இருக்கிறது. பல திரையரங்குகளில் சீட்கள் போக சேர்கள் போட்டு எல்லாம் கொடுத்துள்ளார்கள். அந்தளவுக்கு கூட்டம் உள்ளது. ஜனவரி 16-ம் தேதிக்கு பிறகு எந்த படம் லாபகரமாக இருக்கும் என்பதை சரியாக கூறிவிடலாம்

இப்போதுள்ள வசூலை வைத்து சொல்ல வேண்டுமானால், இரண்டுமே சரி சமமாக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். அதிகபட்சம் தமிழகத்தின் இறுதி வசூலில் ஒரு படம் 20% குறைவாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

SCROLL FOR NEXT