'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், ஆபாசப் பட நடிகை கதாபாத்திரத்தில் நடிப்பதாக படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா கூறியுள்ளார்.
'ஆரண்ய காண்டம்' படத்துக்குப் பின் கிட்டத்தட்ட 8 வருடங்கள் கழித்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் 'சூப்பர் டீலக்ஸ்'. இதில் விஜய் சேதுபதி ஷில்பா என்கிற திருநங்கை கதாபாத்திரத்தில் நடிப்பது பற்றி ஏற்கெனவே செய்திகளும், புகைப்படங்களும் வந்து, படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
மேலும் இந்தப் படத்தில் ஃபகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 'ஆரண்ய காண்டம்' படத்தைப் போலவே, இந்தப் படமும், ஒரே சமயத்தில் நடக்கும் வெவ்வேறு சம்பவங்கள் ஒரு புள்ளியில் இணைவதைப் பற்றியப் படமாக இருக்கும் என்று தெரிகிறது.
குறிப்பாக, இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், ஆபாசப் பட நடிகை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது பற்றி பேட்டி ஒன்றில் குமாரராஜா, "இந்தப் படத்துக்குள் இடம்பெறும் 'மல்லு அன்கட்' என்கிற ஆபாசப் படத்தில் நடிப்பவராக ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைத்தது வித்தியாசமாக இருந்தது. முதலில் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க நதியாவை அணுகினோம். ஆனால் ரம்யா (இமேஜ் பற்றியெல்லாம் கவலையின்றி) ஒப்புக்கொண்டார். தனது வழக்கமான கதாபாத்திரங்களிலிருந்து வேறுபட்டு இருப்பதால் முயற்சிக்கலாம் என்று நினைத்து ஒப்புக்கொண்டார்" என்று தெரிவித்தார்.