தமிழ் சினிமா

மகாநதிக்கு முதல்ல வைச்ச பேரு வேற!

வி. ராம்ஜி

'மகாநதி'க்கு முதல்ல இந்தப் பேரு வைக்கலை. வேற ஒரு பேருதான் வைச்சிருந்தோம் என்று இயக்குநர் சந்தானபாரதி தெரிவித்தார்.

அம்மன் கிரியேஷன்ஸ் எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரிப்பில், சந்தானபாரதி இயக்கத்தில், கமலின் நடிப்பில் உருவான படம் 'மகாநதி'. இந்தப் படம் வெளியாகி 25 வருடங்கள் கடந்துவிட்டன.

கமல், சுகன்யா, பூர்ணம் விஸ்வநாதன், விஎம்சி.ஹனீபா, எஸ்.என்.லட்சுமி, மோகன் நடராஜன் முதலானோர் நடித்திருந்தார்கள்.

இந்தப் படம் குறித்து, இயக்குநரும் நடிகருமான சந்தானபாரதி, தனியா இணையதளச் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

''இந்தப் படத்தின் கதையைச் சொன்ன கமல், ‘நீதான் டைரக்ட் பண்றே’ன்னு சொன்னார். அப்புறம் ஸ்கிரிப்ட்டை கொஞ்சம் கொஞ்சமா எழுதிட்டிருந்தார். அப்படி எழுதும் போதே எங்கிட்ட காட்டினார். இந்தப் படம் காலங்கள் கடந்து பேசிக்கொண்டிருக்கும் படமா வரும்னு அப்பவே தோணுச்சு.

கமலுக்கு எப்போதுமே, பழைய பட டைட்டில்ல ஒரு பிரியமும் ஈர்ப்பும் உண்டு. பழைய படத்து டைட்டிலை வைக்கறதுல ரொம்பவே ஆர்வம் காட்டுவார். இந்தப் படத்துக்கும் அப்படித்தான் ஒரு டைட்டிலைச் சொன்னார். செம டைட்டில் அது.

ஆனா, கதைல வர்ற எல்லா கேரக்டர் பேரும் நதிகளின் பேராவை அமைஞ்சிச்சி. அதனால நதி சம்பந்தப்பட்ட பேராவே டைட்டில் வைக்கலாம்னு முடிவாச்சு. அதன்படிதான் 'மகாநதி'ன்னு டைட்டில் வைச்சார் கமல்.

ஆனா, 'மகாநதி'ன்னு வைக்கிறதுக்கு முன்னாடி கமல் சொன்ன டைட்டிலும், இந்தக் கதைக்கு அவ்ளோ பொருத்தமா இருந்துச்சு. இயக்குநர் ஸ்ரீதர் பட டைட்டில் அது. 'மகாநதி' படத்துக்கு, முன்னால வைச்ச டைட்டில் என்ன தெரியுமா? 'மீண்ட சொர்க்கம்'!

இப்ப யோசிச்சாலும், இந்த 'மீண்ட சொர்க்கம்' டைட்டிலும் பிரமாதமான டைட்டில்தான். ஆனா என்ன... 'மகாநதி' டைட்டில் இன்னும் பலமா அமைஞ்சிச்சு''.

இவ்வாறு சந்தானபாரதி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT